சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, குன்னூர் மக்களின் திறந்தவெளி குப்பை கொட்டும் இடமாக குன்னூர் ஆறு பயன்படுத்தப்பட்டது. குடியிருப்புக் கழிவுகள், கடைகளின் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் எனப் பல ஆண்டுகளாக மக்களாலும் வணிகர்களாலும் தொடர்ந்து கொட்டப்பட்ட குப்பைகள் சேர்ந்து, மொத்த குன்னூர் ஆறும் சாக்கடையாகேவே அறியப்பட்டுவந்தது.
மிக மோசமாக மாசடைந்த குன்னூர் ஆற்றின் துர்நாற்றம், நகர் முழுக்க வீசி நோய் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கழிவுநீர், வனப்பகுதி வழியாகச் சென்று பவானி ஆற்றில் கலந்து மாசை ஏற்படுத்தியது. வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, சமூக ஆர்வலர்கள் பலரும் குன்னூர் ஆற்றை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை.
பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள், ‘கிளீன் குன்னூர்’ என்ற பெயரில் தன்னார்வலர்களை ஒன்றுசேர்த்து, மிக மோசமாக மாசடைந்துள்ள குன்னூர் ஆற்றை சுத்தம்செய்ய, கடந்த மாதம் களம் இறங்கினர். தொடர்ந்து 36 நாள்கள் இடைவிடாது சுத்தம் செய்து, 1.5 கிலேமீட்டர் தூரம் 12 ஆயிரம் டன் குப்பைகளை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து தன்னார்வலர் குன்னூர் வசந்தன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்த நகரத்துக் குப்பைகளைத் தாங்கிய இந்த ஆறு, அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. மலைபோல் குவிந்துள்ள கழிவுகளால் நீரோட்டமே நின்றுவிட்டது. இந்த அழகிய ஆறு, குன்னூர் நகரைக் கடக்கும் 1.5 கிலோமீட்டர் தொலைவில், பல ஆயிரம் டன் பிளாஸ்டிக், மது பாட்டில்கள், குப்பைகளை அகற்றியுள்ளோம். தன்னார்வலர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தின்மூலம் 12 ஆயிரம் டன் கழிவுகளை அகற்றியுள்ளோம்” என்றார்.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட மற்றொரு தன்னார்வலர் சமந்தா கூறுகையில், “மக்களால் சாக்கடையாகவே அறியப்பட்ட இந்த ஆற்றை சுத்தம்செய்ய பல தடைகள் வந்தது. விடா முயற்சியில் நாங்கள் பலரும் ஒன்றாக இணைந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து சுத்தம்செய்துள்ளோம். இதன்மூலம், பவானியில் கழிவுநீர் கலக்கப்படுவது ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கிறோம்.

இத்தனை பேரின் கடுமையான உழைப்பின் காரணமாக மிக மோசமாக மாசு அடைந்திருந்த ஆறு, தூய்மை படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பைகளைக் கொட்டாமல் பாதுகாப்பது நகாரட்சியின் கடமை. எனவே, இனி இந்த ஆற்றை பாதுகாக்கும் பொறுப்பு நாம் அனைவரிடமும் உள்ளது” என்றார்.